கள்ளக்குறிச்சி: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்
கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கியிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழக பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.
பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.
பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 122 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.