திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த, குடியரசுத் தலைவரின் வருகை ஃபென்ஜால் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 34 பேர் தங்கப்பதக்கம், 22 பேர் முனைவர் பட்டம் என 614 பேர் பட்டம் பெற உள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் கோ.பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் மு.கிருஷ்ணன், அறிக்கை வாசிக்கிறார்.
இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெறும் 34 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி திருவாரூரில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளிட்டவை போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கூடுதலாக தமிழ்நாடு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனிடையே தற்போது உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழவில், வேந்தர் கோ.பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அனைவருக்கும் பட்டங்களை வழங்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.