சென்னையில் பரவலாக இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெரம்பூர் முரசொலி மாறன் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமுல்லைவாயல் - திருப்பதி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல், அம்பத்தூர், ஆவடி, வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை முதல் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலும் வடிகால் வழியாக வழிந்தோடி வருகிறது. ஆனால் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களிலும் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.
தொடர்ச்சியாக தற்போது சென்னையில் குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பிரதான சாலையான அரும்பாக்கம் சாலையில் முழங்காலுக்கு மேலாக கடல் போல் மழைநீர் தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.
ஐயப்பன்தாங்கல் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
சென்னை முகலிவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை என்றும் பாராமல் போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து வருகிறார்கள்.
சாலையோரங்களில் மழை நீர் தேங்கிவருவதால் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.