பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்புமணிக்கு விடுக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்தததை அடுத்து, அவர் பதிலளிக்காததால் கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசியதாவது:
”16 குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித விளக்கமும் பதிலும் அளிக்காமல் இருந்துள்ளது அவர் அனைத்து குற்றசாட்டுகளையும் தான் செய்த தவறுகள் என்று ஒப்புக் கொண்டுள்ளார் என்றே அனுமானம் இருப்பதாலும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவையே மற்றும் சரியானவையே என்று முடிவு செய்யப்படுகிறது.
அதனால் கட்சியின் நற்பெயருக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் மேற்படி அன்புமணி அவருடைய செயல்கள் கட்சி ஆரம்பித்தது முதல் இதுநாள்வரை எவரும் செய்யாத மிக மோசமான மற்றும் தலைமைக்கு கட்டுப்படாத தான்தோன்றித்தனமான செயல் மட்டுமன்றி ஒரு அரசியல்வாதி என்ற தகுதியற்றவராகவே தன்னை அவர் நிரூபித்துள்ளார்.
ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்களின் மனம் புண்படும் படியாக நடந்துள்ள இந்த செயல் கட்சியை அழிக்க முயற்சிக்கும் ஒரு முயற்சி என்பது தெரிய வருவதால் கட்சி விரோத போக்கு மற்றும் நடவடிக்கை என்று முடிவு செய்து மேற்படி அன்புமணியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்து நீக்கப்படுகிறார். மேலும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவருடைய நடவடிக்கை மற்றும் போக்கு மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்குவது என்று முடிவு செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இந்த நிமிடம் முதல் நீக்கப்படுகிறார். பாமகவைச் சேர்ந்தவர்கள் அவருடன் எந்த தொடர்பும் கட்சி சார்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி மீறி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்புமணியுடன் 10 பேர் சேர்ந்து கொண்டு தனிக் கட்சியைப் போன்று செயல்பட்டு வருகின்றனர். அரசியல் பலனுக்காக அவருடன் உள்ளவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்.
அன்புமணி வேண்டுமென்றால் தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், அந்த கட்சி வளராது. தனி மனிதனாக நான் ஆரம்பித்த பாமகவில் சொந்த கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.
எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.