FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசு நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி கேள்வி

தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 9:57 am IST
கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி கேள்வி - கோப்புப்படம்
பகிர்:

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் இன்று தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறையில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! மேகதாது அணைக்கு எதிரான சட்டப்பேரவைத் தீர்மானத்தை தமிழக எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

Advertisement

தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் திமுக மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, நாட்டில் உள்ள பல்வேறு மாநில முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் திமுக தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.

அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பாஜக கொண்டுவந்தபோது, சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:

* 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

* மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

* தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.

* தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன?

அந்த நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?

திமுக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் திமுக நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை.

மக்களைத் திசைதிருப்பும் நாடகம்

ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.

திமுக பங்கேற்காது

தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேக்கேதாட்டு அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து திமுக பொதுச் செயலாளர் வெள்ளிக்கிழமை திமுகவின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது.

தமிழ்நாடு முதல்வர் தயாரா?

தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழ்நாடு முதல்வர் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

What is the need for such a consultative meeting? – Kanimozhi asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments