கரூர் சம்பவம்: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு தில்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆஜரான விஜய், தற்போது சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
இன்றும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்ததை தொடா்ந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகக் கோரிய சிபிஐயின் சம்மனை ஏற்று, நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் புறப்பட்டுச் சென்றார்.
நேற்று நண்பகல் 12 மணிமுதல் மாலை 6 மணிவரை விஜய்யிடம் சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு பிரிவின் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஐ விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் விஜய்யிடம் வழங்கப்பட்டு, அதற்கு எழுத்துப்பூா்வமான வாக்குமூலம் அளிக்குமாறு கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு உதவுவதற்காக அந்தக் குழுவிலிருந்து ஒரு சுருக்கெழுத்தாளரும் நியமிக்கப்பட்டாா். விஜய் தனது வழக்கறிஞரின் உதவியுடன் பதில்களை அளித்தாா்.
சிபிஐ தரப்பிலிருந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள 20 மணிநேரம் ஒதுக்கக் கோரியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால், இன்றும் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, பொங்கலுக்குப் பிறகு அடுத்தக்கட்ட விசாரணையை ஒத்திவைக்கக் கோரி விஜய்யின் வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை சிபிஐ ஏற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நேற்றிரவு தில்லியில் தங்கிய விஜய், தற்போது பலத்த பாதுகாப்புடன் தில்லி விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.