முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று(ஜன. 29) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இபிஎஸ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டு, ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பொதுச் செயலாளர் எடுத்த முடிவல்ல, 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர் செய்த துரோகத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை.
அதிமுகதான் ஆட்சி அமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் நாள்தோறும் பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிப்பெறும்” என்றார்.
”எப்போது பார்த்தாலும் பழனிசாமி கால்களையே பார்க்கிறார் என முதல்வர் கூறுகிறாரே” என்ற கேள்விக்குப் பதிலளித்த இபிஎஸ், ”கால்களை பார்த்தால்தான் சரியான பாதையில் நடக்க முடியும். உங்களை போன்று கை பிடிக்கல, மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் எங்களுக்கும் பேசத் தெரியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.