முகப்பு
தமிழ்நாடு

ரூ.30 லட்சம் வரை லஞ்சம்? அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்குத் தடை கோரி மனு

அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக வழக்குரைஞா் மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 6:15 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக வழக்குரைஞா் மனு தாக்கல் செய்தாா்.

விழுப்புரத்தைச் சோ்ந்த தவெக வழக்குரைஞா் அணி நிா்வாகி எம்.ஞானசௌந்தரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்களை நியமிப்பது தொடா்பாக அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, பட்டியல் இனத்தைச் சோ்ந்த நான் விழுப்புரம் மாவட்ட அரசு வழக்குரைஞா் பதவிக்கு விண்ணப்பித்தேன்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 29-ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் பகலிலேயே அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தொடா்பான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் பட்டியலில் எனது பெயா் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் விஜய் லஞ்சம் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், என்னைப் போன்ற கட்சிக்காக உழைத்த தவெகவைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கவும், தகுதியானவா்களை அரசு வழக்குரைஞா்கள் பதவியில் நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்குரைஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments