தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சியும் கஞ்சா ஆட்சியும்: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடைபெறுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சியும் கஞ்சா ஆட்சியும் நடைபெறுவதாக திமுக அரசு மீது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மதுராந்தகம் மற்றும் மதுரையில் நடைபெற்ற கூட்டங்கள், ஓர் எழுச்சியைத் தந்துள்ளன. தமிழகத்தில் நடைபெறுகிற காட்டு தர்பார் ஆட்சி, கஞ்சா ஆட்சி, பெண்கள் மற்றும் சிறுகுழந்தைகள் நடமாட முடியாத ஆட்சிதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கஞ்சா போதையில் சாலையில் வருவோர், போவோரையெல்லாம் வெட்டுகின்றனர். தினமும் ஒவ்வோர் ஊரில் வெட்டுகின்றனர். அதற்கான காரணம் என்னவென்பதும் தெரியவில்லை.
சொத்து வரி 300 மடங்கு அதிகரித்திருக்கிறது, மின்கட்டண உயர்வும் 300 மடங்கு அதிகரித்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றையும் செய்யாமல், ஒன்று அல்லது இரண்டை மட்டும் செய்துவிட்டு, மற்றதைச் செய்யவில்லை.
ஆயிரம் ரூபாய் தருவதாய்ச் சொன்னார்கள். ஆனால், 28 மாதங்களுக்கு தரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வந்த பின்னர்தான் கொடுத்தனர்.
பொங்கல் திருநாளுக்காக முந்தைய ஆண்டுகளில் கொடுக்கவில்லை. இந்த ஆண்டில்தான் கொடுக்கின்றனர்.
கோடைக்காலத்துக்காக ரூபாய் கொடுப்பது எதற்காக? வாக்குகளுக்காக.
இவற்றையெல்லாம் மக்கள் புரிந்து வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள சாதாரண மக்களும் இந்த ஆட்சியின் அவல நிலையை தெரிந்து வைத்துள்ளனர்.
ஆகையால், இந்த ஆட்சி எத்தனைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், தேர்தலில் ஆட்சி மாற்றம் என்று மக்கள் தீர்மானித்து விட்டனர் என்று தெரிவித்தார்.