தவெகவுடன் கூட்டணிக்கு முயலவில்லை: அமித் ஷா
தவெகவுடன் கூட்டணி வைக்க ஒருபோதும் முயலவில்லை என அமித் ஷா பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜகவும் தவெகவும் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வந்தநிலையில், அதனை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா மறுத்துள்ளார்.
தில்லியில் டைம்ஸ் நவ் மாநாடு நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், ”தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்தவொரு முயற்சியையும் நாங்கள் (பாஜக) செய்யவில்லை.
அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அது எங்களின் வாக்கு வங்கியைத்தான் எதிர்மறையாக பாதிக்கும் என கருதுகிறேன்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரையில், அதிமுகதான் மூத்த சகோதரர். அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு வலிமை சேர்க்கிறது.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசி வருகிறது. தேர்தலில் வலுவான பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.