ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டியலினத்தோர் மீதான தாக்குதலுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டியலினத்தோர் மீதான தாக்குதலுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய வன்கொடுமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மே 29 ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் உறவினர்கள் சிலர் மே 28-ல் இரவு 9 மணிக்குமேல் மணமக்களை வாழ்த்தி ஃப்ளக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் ஃப்ளக்ஸ் அமைத்துக் கொண்டிருந்த இளைஞர்களோடு “இங்கே ஃப்ளக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது” என்று தகராறு செய்திருக்கிறார். இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது.
Advertisement
Advertisement
இதே கிராமத்தில், கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்துள்ளதாக அறியமுடிகிறது. இவைகள் அனைத்தும் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தாலும், இதில் ஒரு பிரச்னையில்கூட காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் கட்டப் பஞ்சாயத்து முறையில் சமாதானம் பேசி அனுப்பிவைத்ததாகவும் மாதா கோவில் தெருவைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள். மே 28 ஆம் தேதி நடைபெற்ற வன்கொடுமையிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கமான முறையில் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடித்துள்ளது.
இந்நிலையில், மே 29 ஆம் தேதி மாலையில் திருமண வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் மணவிழா விருந்தில் பங்கேற்பதற்காக கூடியிருந்துள்ளனர். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் 9 பேர் அடையாளம் தெரியாதபடி துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்டவாறே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்கள் கூடியிருந்தவர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரிவாளை வீசி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் (49), சந்தோஷ் குமார் (21), அருள்மாறன் (23), ராயப்பன் (18), ராம்குமார் (20), திருமண வீட்டில் மேளம் அடிப்பதற்காக வந்திருந்த மேளக் கலைஞர் மாடசாமி (19) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலை இந்தக் கொடூர சம்பவத்துக்குப் பின்புலமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற சாதிய ஆதிக்க வன்கொடுமை தாக்குதல்களும், படுகொலைகளும், பட்டியலின மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதிய கண்ணோட்டத்தோடு நடைபெறுகிற இத்தாக்குதல்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், வழக்குகளைப் பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து ரீதியில் சமாதானமாகப் பேசி காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுகின்றன.
எனவே, உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், வழக்குகளை பதிவு செய்யாமலும் மிக அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதும் எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான தீருதவியை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.