FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வினாத்தாள் கட்டண வசூல் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி தேவை! அரசுப் பள்ளிகளில் தொடரும் சர்ச்சை முடிவுக்கு வருமா?

வினாத்தாள் கட்டண வசூல் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி தேவை: அரசுப் பள்ளிகளில் தொடரும் சர்ச்சை முடிவுக்கு வருமா?

2 நவம்பர் 2026, 4:15 am
பகிர்:

- மு. பிரபு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வு வினாத்தாள்களுக்கான கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அரசு ரத்து செய்து, இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு, பருவத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், இதற்கு எந்தவித அரசாணையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மலைக்கொளுந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது.

இதன்பிறகே இந்த விவகாரம் மாநில அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவு, அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வினாத்தாள் கட்டண வசூல் முறையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதுடன், இந்தக் கட்டணம் ரத்து குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அரசின் கொள்கை முடிவா? பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களின் தன்னிச்சையான முடிவா? மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? இதற்கான கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது இந்த விவகாரம் சார்ந்து எழுந்துள்ளன.

கட்டணம் எவ்வளவு?: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு, பருவத் தேர்வு ஆகியவற்றுக்கான வினாத்தாள்களுக்காக ஆண்டுக்கு ரூ. 50 முதல் ரூ. 120 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்தத் தொகை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் உத்தரவின்பேரில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு கல்வித் துறைக்கு செலுத்தப்படுகிறது. வினாத்தாள் அச்சிடுதல், போக்குவரத்துச் செலவுகள், பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட செலவினங்களுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. காரணம், இவர்களுக்கான வினாத்தாள் தயாரிப்பதற்கான நிதியை அரசே ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் தொகை கல்வித் துறை மூலம் பருவம் வாரியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாள் தயாரிப்புக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது.

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அச்சிடுவதற்கான கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலிப்பதற்கான உத்தரவு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் அந்தந்த மாவட்ட கல்வி நிர்வாகம் மூலம் வரும்.

அதன் பின்னர், மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் அல்லது தொடர் விடுப்பில் இருக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை தலைமை ஆசிரியர்களே ஏற்க வேண்டியுள்ளது என்றனர்.

அரசாணை இல்லை: "மாணவர்களிடம் வினாத்தாள்களுக்கு ரூ.50 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் அச்சகங்களின் கட்டண நிர்ணயத்தின் அடிப்படையில் இந்தத் தொகை மாறுபடுகிறது. கரூரில் ரூ.80, கடலூரில் ரூ.50, மதுரையில் ரூ.60, திருநெல்வேலியில் ரூ.120 என அந்தந்த மாவட்டத்துக்கு ஏற்ப வினாத்தாள் கட்டணம் மாறுபடுகிறது.

இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ரூ.1.5 கோடி வரை வசூலிக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வினாத்தாள்களுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு உரிய அரசாணை எதுவும் இல்லை.

எனவே, மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கும் முறையை அரசு ரத்து செய்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அல்லது அருகில் உள்ள அரசு அச்சகங்கள் மூலம் வினாத்தாள்களைத் தயாரித்து விலையின்றி வழங்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மலைக்கொளுந்தன்.

அரசு ஏற்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வினாத்தாள் கட்டணத்தை ஏற்பது போன்று, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் வினாத்தாள் கட்டணத்தையும் அரசே ஏற்றால் எந்தச் சர்ச்சைக்கும் வாய்ப்பு ஏற்படாது என்றனர்.

தமிழகத்தில் ஏறத்தாழ 6,000 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு அச்சகங்கள் மூலம் வினாத்தாள்களை அச்சிட்டு வழங்க ஏறத்தாழ ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 10 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. மாணவர்களின் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடும் மாநில அரசுக்கு இந்தத் தொகை பெரிய செலவினமாக இருக்க வாய்ப்பில்லை.

எனவே, வினாத்தாள்களுக்கான செலவினத்தை அரசே ஏற்பதோடு, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்; இதன்மூலம் ஒரு சில மாவட்ட கல்வித் துறையில் எழும் வினாத்தாள் கட்டணத் தொகை முறைகேடு சர்ச்சையும் தவிர்க்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments