உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?
உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி என்று டிடிவி தினகரன் விமர்சித்திருப்பது பற்றி..
உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக உத்தமர்களின் ஆட்சியில் ரூ.5 கோடிக்கு பேரம் பேசப்பட்டதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? அரசுப் பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா? என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் அவர் வெளியிட்டிருக்கும் கண்டனத்தில், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி அவர்களின் மூலம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் லயோலா மணி அவர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி பலரின் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேசப்பட்ட பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன எனப் பொதுமக்கள் மத்தியில் அடுத்தடுத்து எழும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களுக்கு உள்ளது.
ஒரு கோப்பைத் திறந்ததற்கே திமுக முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கிறார்; அடுத்தடுத்த கோப்புகளைத் திறந்தால் என்னவெல்லாம் ஆகுமோ? எனப் பில்டப்பிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படி இருந்திருந்தால், லஞ்சம் வாங்கியதாகச் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சருடன், லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த இந்நாள் நிதியமைச்சரும் சிறையில்தானே இருந்திருக்க வேண்டும்?
ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை; இடைத்தரகர் வேலை பார்த்தாலும் அவர் சொந்தக் கட்சியினராக இருந்தால் சலுகை என்ற தவெக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகளைத்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
எனவே, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டு, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, இடைத்தரகர் வேலை பார்த்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மீதும், இப்பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ் மோகன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.