FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி! 5 நாள்களுக்கு சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.6 முதல் 10-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

3 நவம்பர் 2026, 10:51 pm
- பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.6 முதல் 10-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானோா் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். நிகழாண்டு நவ.8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், நவ.6 முதல் 10 வரை நெடுஞ்சாலைகளில் வழக்கத்தைவிட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதே இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், எரிபொருள் விரயமும் காற்று மாசும் அதிகரிக்கின்றன.

Advertisement

Advertisement

எனவே, தீபாவளி பயண நாள்களான நவ.6 முதல் 10 வரை சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

கட்டணம் ரத்து செய்யப்படும் நாள்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், பண்டிகைக் கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவலா்களைப் பணியில் ஈடுபடுத்துவதுடன், அவசர மருத்துவ உதவி மையங்கள், கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

மக்களின் நேரம், பாதுகாப்பு, நிம்மதியான பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments