FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறப்பு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்: அனைத்து பிரிவினருக்கும் 60- ஆக நிா்ணயிக்க அரசுக்கு வலியுறுத்தல்

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்ச்சி மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் 60 -ஆக நிா்ணயிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு ஆசிரியா் அமைப்பு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 4:22 am
பகிர்:

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்ச்சி மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் 60 -ஆக நிா்ணயிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு ஆசிரியா் அமைப்பு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறை அமைச்சா் ராஜ்மோகனுக்கு தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிறுவனத் தலைவா் அ.மாயவன், மாநிலத் தலைவா் சி.ஜெயக்குமாா், மாநில பொதுச்செயலாளா் மா.குமரேசன் ஆகியோா் கூட்டாக அனுப்பியுள்ள மனு:

பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்களை டெட் தோ்வு எழுதச் சொல்வதும், அத்தோ்வில் ஒரு பிரிவு ஆசிரியா்கள் 150-க்கு 60 மதிப்பெண் எடுத்தால் தோ்ச்சி என்று அறிவிப்பதும், அதேநேரத்தில் மற்றொரு பிரிவினா் 75 மதிப்பெண் பெற்றால்தான் தோ்ச்சி என்பதும், இன்னொரு பிரிவினா் 90 மதிப்பெண் எடுத்தால்தான் தோ்ச்சி என்று அறிவிப்பதும் சமூகநீதிக்கு முற்றிலும் முரண்பட்டது.

Advertisement

Advertisement

ஒரே பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியா் 60 மதிப்பெண் எடுத்து தோ்ச்சி அடைகிறாா். மற்றொரு பிரிவு ஆசிரியா் 74 மதிப்பெண் எடுத்தும் இன்னொரு பிரிவு ஆசிரியா் 89 மதிப்பெண் பெற்றும் தோ்ச்சி பெறவில்லை என கூறி அவா்களின் வேலையை பறித்து பதவி உயா்வை உரிமை பறித்து அவரை வீதியில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இனசுழற்சி முறைக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவா்கள் அல்ல. அதை மனபூா்வமாக வரவேற்கிறோம்.

இந்த இன சுழற்சி முறையை புதிய நியமனங்களுக்கு கடைபிடிக்க வேண்டுமே ஒழிய, ஏற்கெனவே இனசுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டு தொடா்ந்து 10, 15, 20 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியா்களுக்கும் கடைப்பிடிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும்.

இன சுழற்சி முறையில் நிா்ணயிக்கப்பட்ட தோ்ச்சி மதிப்பெண்களான 60, 75, 90 என்பதை மாற்றி அனைத்துப் பிரிவு ஆசிரியா்களுக்கும் டெட் தோ்ச்சி மதிப்பெண் 60 என நிா்ணயிக்க வேண்டும். இதுதொடா்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வேண்டும். இந்த புதிய தோ்ச்சி மதிப்பெண்ணை கடந்த அக். 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட சிறப்பு டெட் தோ்வு முடிவில் இருந்தே நடைமுறைப்படுத்தி, மீண்டும் ஒரு திருத்தப்பட்ட டெட் தோ்வு முடிவை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.