தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது
தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறித்து...
தேனியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் (56). அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இவர் தனது பணியை முடித்து தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பல்
Advertisement
Advertisement
அப்போது, தேனி சமதர்மபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மது போதையில் இருந்த ஒரு கும்பல் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
கைபேசியில் வீடியோ
இதனை கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் போதை கும்பலிடம் சாலையை மறிக்காதீர்கள் என்று கூறியதை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இளஞர்கள் செய்யும் அடாவடியை தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
ஆய்வாளர் மீது தாக்குதல்
இதனை பார்த்த போதை கும்பல் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரை தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவிக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆய்வாளர் உயிரிழப்பு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற சமதர்மபுரம் பகுதிக்கு வந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கெளதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு பேரை பிடித்து விசாரணை
சந்தேகப்படும்படியாக அந்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பேர் கைது
இந்த நிலையில்,சிறப்பு சார்பு ஆய்வாளரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.