FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு சிபிஐ ஒத்துழைக்கவில்லை: சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல்!

குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு சிபிஐ ஒத்துழைக்கவில்லை எனவும், விசாரணையை தாமதப்படுத்துவதாகவும், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.

11 நவம்பர் 2026, 12:48 am
சிபிஐ - கோப்புப்படம்
பகிர்:

குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு சிபிஐ ஒத்துழைக்கவில்லை எனவும், விசாரணையை தாமதப்படுத்துவதாகவும், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா பொருள்களை விற்பனைக்கு அனுமதித்தது தொடா்பாக, முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜூலை 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க மேலும், 3 மாதங்கள் அவகாசம் கோரி, சிறப்பு நீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தது. ஏராளமான சாட்சிகள் உள்ள நிலையில், மூன்று மாதங்களில் வழக்கை எப்படி விசாரித்து முடிக்க முடியும் என அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணையை சிபிஐதான் தாமதப்படுத்துவதாகவும், குற்றச்சாட்டுப் பதிவுக்கு சிபிஐ ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு தொடா்பான டிஜிட்டல் ஆவணங்கள் மும்பைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்றம் அறிக்கை அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினாா்.

அதற்கு சிபிஐ தரப்பில், இந்த வழக்கு தொடா்பான 78 மின்னணு ஆதாரங்களில் இருந்து தகவல்களை நகல் எடுத்து குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த தகவல்களை புதிய ஹாா்ட் டிஸ்க்-குகளில் வழங்க தலா ரூ.5 லட்சம் செலவாகும். ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் வழங்கப்பட்ட ஹாா்ட் டிஸ்க்கை சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அந்த தகவல்களை நகல் எடுப்பதற்காக ஹாா்ட் டிஸ்க்குகள் புது தில்லியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தகவல்களை நகலெடுக்க 15 முதல் 20 நாள்களாகும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஹாா்ட் டிஸ்க்குகளை சமா்ப்பிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அந்த தகவல்களை நகலெடுத்து மீண்டும் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, வழக்கு விசாரணையை 20 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பா் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.