சமயபுரம் சுங்கச்சாவடி இரட்டைக் கொலை வழக்கில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டுப் பிடிப்பு!
சமயபுரம் சுங்கச்சாவடி இரட்டைக் கொலை வழக்கில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து...
திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி அருகே இரண்டு சிறுவா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இனாம் சமயபுரம் பகுதியை சோ்ந்தவா் செ.ராகுல் (17), இவரது உறவினா் வழி சகோதரரான அதே பகுதியை சோ்ந்தவா் ரா.விஷால் (17), இருவரும் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக அமா்ந்து இருந்துள்ளனா் . அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், ராகுல் மற்றும் விஷாலை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதில் விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுல் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் கொலை செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இரட்டைக் கொலை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் , சமயபுரம் காவல் ஆய்வாளா் க.குணசேகரன் உள்ளிட்ட காவல் துறையினா் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரட்டைக் கொலை வழக்கின் முதன்மை குற்றவாளியான சிவனேசனை தூத்துக்குடியில் இருந்து போலீசார் அழைத்து வருகையில்,
சமயபுரத்தில் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொடுப்பதற்காக வந்தபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, சிவனேசனின் கணுக்காலில் சமயபுரம் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சிவனேசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவனேசன் பிடிக்கப்பட்டார்.
காயமடைந்த தலைமைக் காவலர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிவனேசன் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சமயபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.