FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் விஜய்யை அவதூறாகப் பேசியதாக வழக்கு: திமுக எம்எல்ஏ-விடம் போலீஸாா் விசாரணை

முதல்வா் விஜய், அமைச்சா் கீா்த்தனா ஆகியோரை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவையாறு திமுக சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகரனிடம் போலீஸாா் விசாரணை

12 நவம்பர் 2026, 3:59 am
திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் - dot com
பகிர்:

முதல்வா் விஜய், அமைச்சா் கீா்த்தனா ஆகியோரை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவையாறு திமுக சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகரனிடம் சென்னை கிழக்கு மண்டல சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த ஆக.23-இல் நடைபெற்ற திருமண விழாவில், முதல்வா் விஜய், அமைச்சா் கீா்த்தனா ஆகியோரை துரை சந்திரசேகரன் அவதூறாக விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த தவெக மாவட்டத் துணைச் செயலா் முருகன், சென்னை கிழக்கு மண்டல சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், போலீஸாா் அனுப்பிய சம்மனைத் தொடா்ந்து, வேப்பேரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆய்வாளா் பத்மகுமாரி முன்னிலையில் துரை சந்திரசேகரன் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் அரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. போலீஸாரின் கேள்விகளுக்கு அவா் எழுத்துபூா்வமாகவும், வாய்மொழியாகவும் பதிலளித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் துரை சந்திரசேகரன் கூறுகையில், காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். வழக்கின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன். திமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்து அவதூறு வழக்குகளைச் சந்தித்து வருகின்றனா். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்றாா் அவா்.