மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை... முதல்வர் விஜய் நாளை வழங்குகிறார்!
மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் முதல்வர் விஜய்.
குழந்தைகள் நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் நாளை (நவ. 13), மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின் படி, குழந்தைகள் நாளைக் கொண்டாடும் விதமாக, நவ. 13-ல் (நாளை) அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்பட 61,84,566 நபர்களுக்கு கேக்குகள் (Cakes) வழங்க 9.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்குக் குழந்தைகள் நாள் வாழ்த்து அட்டைகள் வழங்கி குழந்தைகள் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதனடிப்படையில் நான்கு பெருநிறுவனங்கள் வாயிலாக FSSAI தரத்திலுள்ள கேக்குகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கேக்குகளின் முன்மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரக அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கேக்குகள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு நாளை மாணவர்கள் அனைவருக்கும் கேக்குகளுடன் வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டு குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) மண்டல மேலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கேக்குகள் வைக்கப்பட்டுள்ள TNCSC கூடங்கள் மற்றும் பள்ளிகளில் எலிகள், பூச்சிகள் போன்றவை இல்லாத வகையில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக்குகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பார்கள்.
குழந்தைகள் நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.