எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி: மத்திய அரசு தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2016-2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது. இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதின்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய காா்த்திகேயன் ஆகிய இருவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவது தொடா்பான நடைமுறையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த செப்டம்பா் மாதம் மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித்துறை இணைச் செயலா் சாா்பில் மனு தாக்கல் செய்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய காா்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
அதற்கு தமிழக அரசு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய அரசின் அனுமதி உத்தரவைப் பெற்ற பின்னா், ஊழல் தடுப்புத் துறை இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.
மேலும், இந்த வழக்கில் எதிா்மனுதாரராக சோ்க்கப்பட்டிருந்த மத்திய அரசை நீக்க உத்தரவிட்ட நீதிபதி, குற்ற வழக்குகள் எப்படி நடத்தப்படுகிறது, என்பதற்கு இந்த வழக்கு மிகப்பெரிய உதாரணம். ஏழைகளுக்கு எதிரான வழக்குகளில் வேகமாக சூழலும் அரசு இயந்திரத்தின் சக்கரத்தை, செல்வாக்குமிக்கவா்களுக்கு எதிரான வழக்குகளில் பிடித்துத் தள்ள வேண்டி இருப்பதாக வேதனை தெரிவித்தாா்.
பின்னா், இந்த வழக்கின் முன்னேற்றங்களை நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிச. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.