முதல்வர் ஆய்வுசெய்த பிறகும் காவல் மரணங்கள் தொடர்கின்றன! - உதயநிதி கண்டனம்!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு செய்த பிறகும் காவல் நிலையங்களில் மரணங்கள் தொடருவதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்தின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
இதுபற்றி, உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ள பதிவில்,
“முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக உடல்கூராய்வு செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதேபோல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, வசனம் பேசி ஆட்சி நடத்தும் இந்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?” எனக் கூறியுள்ளார்.