அம்பத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்!
அம்பத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது குறித்து...
அம்பத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நாளை (நவ. 15) நடைபெறுகிறது.
அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பழமையான வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி கடந்த 9-ஆம் தேதி காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி அங்குரார்ப்பணம், விநாயகர் மாட வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் மூலவர் முருகன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் யாகசாலை பூஜை தொடக்கம் பாலமுருகன் அலங்காரத்தில் மாட வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 11-ஆம் தேதி யாகசாலை பூஜை, மூலவர் அபிஷேகம், ஞானப்பழம் வாங்குதல், சின்ன மயில் வாகனத்தில் மாடவீதி புறப்பாடும், 12-ஆம் தேதி மூலவர் அபிஷேகம் யாகசாலை பூஜையுடன் பிரணவ மந்திர உபதேசம், அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (நவ.13) யாகசாலை பூஜை, மூலவர் அபிஷேகம் மற்றும் வேடன் அலங்காரத்தில் யானை வாகனத்தில் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது. சனிக்கிழமை (நவ.14) யாகசாலை பூஜை மூலவர் அபிஷேகத்துடன் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவ.15) காலை யாகசாலை பூஜையுடன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும், மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், ஆட்டுக்கிடா வாகனத்தில் மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (நவ.16) காலையில் யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஆகுதி, மூலவர் முருகன் மற்றும் உற்சவர்களுக்கு கலசாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணம் மற்றும் மயில் வாகனத்தில் மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மகா கந்த சஷ்டி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை முருகனுக்கு தினமும் இரு வேளை லட்சார்ச்சனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செ.மோகன் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.