கோடநாடு எஸ்டேட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி வழக்கு!
கோடநாடு எஸ்டேட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி வழக்கு...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலையை காமராஜ் நகர், அண்ணா நகர் பகுதி மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் அமைந்துள்ள காமராஜ் நகர், அண்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 2.5 கிலோமீட்டர் உள்ள இந்த சாலையைப் பயன்படுத்த கட்டணம் வசூலிப்பது, இரவு நேரங்களில் போக்குவரத்தை தடை செய்வது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, காமராஜ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், இரு கிராமத்திலும் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அந்த சாலையை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாநில பட்டியல் மற்றும் பழங்குடியின ஆணையமும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் கோடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும், தனியார் சாலையாக இருந்தவரும் கோடநாடு எஸ்டேட் சாலையை பொது சாலையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற அந்த நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றம் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும், கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டது.