தமிழகத்துக்குத் தேவை மசாலா! சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு தவெக அளித்த பதில்!
தமிழகத்துக்குத் தேவை மசாலா என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கு தவெக அளித்த பதில் பற்றி...
உங்களுக்குத் தேவையானது மசாலா, எங்களுக்குத் தேவையானது முடிவுகள் என்று, தொழில்துறைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆந்திர மாநிலம் குறித்த கேள்விக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பதிலளித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏன் ஆந்திர மாநிலத்தில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த முனைகின்றன என்பது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பதில், இரு மாநிலங்களுக்கும் இடையே, எந்த மாநிலம் அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற சவாலை தமிழகத்துக்கு விடுத்திருப்பது போல மாறியிருக்கிறது.
Advertisement
Advertisement
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சிஐஐ (CII) கூட்டாண்மை மாநாட்டில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆந்திர முதல்வர் கொடுத்த பதில், தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் வைத்துவரும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல மாறியிருக்கிறது.
மேடையில் அமர்ந்திருந்த சந்திரபாபு நாயுடுவை நோக்கி, தொழில்துறைகளைத் தக்கவைத்துக் கொள்வதில் மாநில தலைமையின் நிர்வாகம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது குறித்து செய்தியாளர் கேட்டிருந்தார்.
அதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “உங்களுக்கு மசாலா (சுவாரஸ்யம்) தேவைப்படுகிறது; எங்களுக்கு முடிவுகள் தேவைப்படுகிறது” என்று ஒரு சில வார்த்தைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் தொழில் போட்டியை வெளிப்படுத்தியிருந்தார்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்கு இடையே ஏற்கனவே போட்டி நிலவும் சூழலில், முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்றும் நாயுடு பதிலளித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பது எப்படி என்று எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாட்டின் 31 பதிப்புகளில் எட்டு பதிப்புகளைத் தான் நடத்தியதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் அவர் விளக்கினார்.
விசாகப்பட்டினத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒரு ரூபாய்க்கு நிலம் வழங்கும் திட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டியிருந்தார்.
தொழிற்துறை வளர்ச்சி அடையும்வரை, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஆந்திர அரசு தொடக்கத்தில் அதிக ஊக்கத்தொகைகளை வழங்கி, தொழில்துறை வளர்ச்சியடைந்த பிறகு அவை படிப்படியாகக் குறைக்கப்பட்டதையும் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார்.
சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலளித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் சத்யகுமார், தமிழ்நாட்டு மக்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அறிவு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவையே எங்கள் வளர்ச்சியின் மையமாக வைத்திருக்கிறோம். எங்களின் திறமையான பணியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வலுவான தொழில் சூழல் போன்றவை பல தலைமுறைகளாகக் கட்டமைக்கப்பட்ட அடித்தளங்கள்; இவை ஏதோ தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
பாஜகவுடனான உங்கள் கூட்டணி உங்களுக்கு அரசியல் ஆதாயங்களைத் தரக்கூடும். ஆனால், தமிழ்நாட்டின் வலிமை என்பது அதன் மக்கள், அவர்களின் திறன் மற்றும் வளர்ச்சியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றிலேயே அடங்கியுள்ளது.
2027 ஜனவரியில் தாவோஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்கவிருப்பதை முன்னிட்டு, நான் ஒரு சவாலை முன்வைக்கிறேன்: ஈர்க்கப்பட்ட முதலீடுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் போட்டியிடுவோம்.
தமிழக முதல்வர் விஜய் தலைமையின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தை விட அதிக முதலீடுகளைத் தமிழ்நாட்டால் ஈர்க்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2027 ஜனவரியில் முடிவுகள் பேசட்டும் என்று பதிலளித்துள்ளார்.
Tamil Nadu needs Masala! TVK’s response to Chandrababu Naidu’s remarks