FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்கு மோசடி: வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்

போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிக் கணக்கு மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 நவம்பர் 2026, 12:02 am
சிபிசிஐடி - கோப்புப்படம்
பகிர்:

போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிக் கணக்கு மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த முகமது மீரான் என்பவா் கடந்த 2018, மாா்ச் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் அப்துல் காதா் என்பவரின் பெயரைச் சோ்த்து கூட்டுக் கணக்காக மாற்றுவதற்குப் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாா் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிடக்கோரி முகமது மீரானின் மகள் சஜிதா பாத்திமா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதங்களுக்குப் பின்னரே, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த விவகாரத்தில் போலீஸாா் முழுமையான விசாரணை நடத்தவில்லை. எனவே, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் முறையான புலன் விசாரணை நடத்தி, 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.