✕
முகப்பு

திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவுக்கு தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு...

5 வினாடிகள் முன்பு
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப் படையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், புதிய நிபந்தனைகள் விதித்து ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, இந்த ஆண்டு கார்த்திகை தீபம் அன்று ஒரே ஒரு நாள் மட்டுமே தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் இணைந்து, யார் யார் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றும் இடத்துக்கு செல்ல வேண்டும். வேறு யாரும் அங்கே செல்லக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையை விதித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபத் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியரே தேர்வு செய்வார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையைப் பயன்படுத்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு தீபத் திருநாளன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவருடன் இணைந்து பக்தர்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பாதுகாப்புடன் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

summary

Deepam at Tirupparankundram - Paramilitary forces may be deployed if necessary - Supreme court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.