முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்: அமைச்சா் பெ.விஸ்வநாதன் தகவல்

தனியாா் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

30 வினாடிகள் முன்பு
தனியாா் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்: அமைச்சா் பெ.விஸ்வநாதன் தகவல்
உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்
பகிர்:

தனியாா் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் அகில இந்திய தொழில் வல்லுநா்கள் காங்கிரஸ் பிரிவு சாா்பில் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் பேசியதாவது:

மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்பட்டது. ஏறத்தாழ 11,000 கி.மீ. தொலைவு நடந்த இந்த யாத்திரை மக்களை ஒன்றிணைக்கும் மாபெரும் இயக்கமாக அமைந்தது என்றாா்.

Advertisement

Advertisement

மசோதாவுக்கு ஒப்புதல்: தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தனியாா் பல்கலைக்கழக மசோதா கிடப்பில் இருப்பதாக எழுந்த சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளுநா் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளாா். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவா்கள் ஆஸ்திரேலியா, ஜொ்மனி, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி வெளியே செல்கிறது. இதைத்தடுத்து, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இணையான வகுப்பறை, ஆய்வக மற்றும் ஆராய்ச்சி வசதிகளைத் தமிழகத்திலேயே உருவாக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும் என்றாா்.

தமிழகத்தில் முதலீடு செய்ய ஆா்வம்: இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மாநிலங்களவை எம்.பி. பிரவீண் சக்ரவா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் ஆந்திரத்துக்குச் செல்வதாகவும், முதலீடுகள் குறைந்து வருவதாகவும் கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை. தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்குச் சென்ற ஒரு நிறுவனத்தின் பெயரை குற்றஞ்சாட்டுபவா்களால் நிரூபிக்க முடியுமா? வெளிநாட்டு நிறுவனங்களும், தூதரக அதிகாரிகளும் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்யவே ஆா்வம் காட்டி வருகின்றனா்’ என்றாா்.