அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலை கைவிடுவதா?- அன்புமணி கண்டனம்
அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலை கைவிடுவதா? என அன்புமணி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...

அரசின் கடன்களைக் குறைத்துக் காட்ட நெல் கொள்முதலை கைவிடுவதா? என கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்டமைப்பற்ற கூட்டுறவு அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வழிவகுக்கக் கூடாது
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசின் நேரடிக்கடன் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பொறுப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கூட்டுறவு அமைப்புகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. கடன்களைக் கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு, உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வழிவகுக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1973 ஆம் ஆண்டு முதல் காவிரி பாசன மாவட்டங்களிலும், 2002 ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்ட முறையிலும் உழவர்களிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், இந்தப் பணி விரைவில் கூட்டுறவுத் துறையின் டான்பெட் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிர்ச்சியளிக்கும் காரணங்கள்
இதற்காக தமிழக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மாநில அரசின் நேரடிக் கடன் அதிகரித்து வரும் நிலையில், கடன் சுமையை அரசிடமிருந்து கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நோக்குடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிதிப் பொறுப்புடமை மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டத்தின்படி, ஓராண்டில் மாநில அரசால் வாங்கப்படும் நேரடிக் கடனின் அளவு அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது.
2026-27ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிஎஸ்டிபி) ரூ.40.67 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 3%, அதாவது ரூ.1.21 லட்சம் கோடி மட்டும் தான் கடன் வாங்க முடியும். ஆனால், அதை விடக் கூடுதலாக கடன் வாங்க வேண்டியுள்ள நிலையில், நெல் கொள்முதலுக்கு தேவைப்படும் ரூ.11,000 கோடியை கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் வாங்கவே இந்த ஏற்பாட்டை தமிழக அரசு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நெல் கொள்முதலை மத்திய அரசுக்காகத் தான் தமிழக அரசு மேற்கொள்கிறது. நெல் கொள்முதல் விலை மற்றும் அதை கையாளுவதற்காக ஆகும் செலவு முழுவதையும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும். ஆனால், இதற்கு குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்பதால் தான், அதற்கு தேவைப்படும் தொகையை நுகர்பொருள் வாணிபக் கழகம் கடன் வாங்க வேண்டியுள்ளது. நெல் கொள்முதலை டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தால், அதன் பேரில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பது தான் அரசின் திட்டமாகத் தெரிகிறது.
அதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்திடம் ரூ.10,000 கோடி கடன் கோரி டான்பெட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
டான்பெட் வாயிலாக கிராமப்புற தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்காக சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் அமுதா தெரிவித்திருப்பதும் அரசின் நிலை மாற்றத்தை உறுதி செய்துள்ளது.
கட்டமைப்பையே சிதைத்து விடக் கூடும்
மேலோட்டமாகப் பார்த்தால், நெல் கொள்முதலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தினாலும், டான்பெட் நிறுவனம் நடத்தினாலும் ஒன்று தானே? என்று தோன்றக் கூடும். ஆனால், இது நெல் கொள்முதல் கட்டமைப்பையே சிதைத்து விடக் கூடும்.
கட்டமைப்புகளும், மனிதவளமும் இல்லை
டான்பெட் என்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வெளியிலிருந்து வாங்கி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கும் கூட்டுறவு அமைப்பு. ஆண்டுக்கு சுமார் 4.50 லட்சம் டன் உரங்களை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்புவது தான் இதன் பணியாகும். இது மிகவும் எளிதான பணியாகும். மாறாக, ஆண்டுக்கு 60 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்வதற்கு தேவையான கட்டமைப்புகளும், மனிதவளமும் டான்பெட் அமைப்பிடம் கிடையாது.
அரசு அனுமதிக்கக் கூடாது
அதுமட்டுமின்றி, டான்பெட் உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளின் நிதிநிலை மோசமாக உள்ள நிலையில், அவற்றின் நிதிச்சுமை அதிகரித்தால் உழவர்கள் வழங்கிய நெல்லுக்கு பணம் வழங்க முடியாத நிலை உருவாகும். ஒரு கட்டத்தில் நெல் கொள்முதலே முடங்கும் நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை ஏற்பட அரசு அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நெல் கொள்முதலுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாங்கும் கடனையும் சேர்த்து மொத்த நேரடிக் கடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்குள் தான் இருந்து வருகிறது. இப்போது பிற தேவைகளுக்காக தமிழக அரசு வாங்கும் கடன் அதிகரித்திருப்பது தான் மொத்த நேரடிக் கடன் அளவு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டுவதற்கு காரணம் ஆகும்.
டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது
இந்த நிலையை சமாளிக்க தமிழக அரசு, அதன் பிற தேவைகளையும், கடன்களையும் குறைக்க வேண்டுமே தவிர, உழவர்களை பாதிக்கும் வகையில் நேரடி நெல் கொள்முதலை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து பறித்து டான்பெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது. அது நெல் கொள்முதலுக்கு மூடுவிழா நடத்தவே வழி வகுக்கும்.
எனவே, தமிழ்நாடு அரசு அதன் கடன் தேவைகளைக் கட்டுப்படுத்தி, உழவர்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.