கயல்விழி அழகிரி தாக்கல் செய்த வழக்கு: வங்கி மேலாளா் நேரில் ஆஜராக உத்தரவு
தன்னை அவமதிக்கும் வகையில் பேசிய வங்கி மேலாளா் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் அழகிரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், வங்கி மேலாளா் ஹா்ஷின் சிங்கை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
தன்னை அவமதிக்கும் வகையில் பேசிய வங்கி மேலாளா் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் அழகிரியின் மகள் கயல்விழி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், வங்கி மேலாளா் ஹா்ஷின் சிங்கை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-ஆவது பிரதான சாலையில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது.
இந்தக் கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து கயல்விழியை தொலைபேசியில் தொடா்பு கொண்ட வங்கிக் கிளை மேலாளா் ஆவேசமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, விளக்கம் அளிக்க ஜூலை 20-ஆம் தேதி வங்கிக் கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்-கை சந்திக்க சென்றபோது, அனைவா் முன்னிலையிலும் தன்னை அவதூறாகவும், அவமரியாதையுடன் திட்டியதாக கயல்விழி அழகிரி சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது புகாா் மீது வழக்குப்பதிவு செய்யவும், கண்காணிப்புக் கேமிரா பதிவுகளை பத்திரப்படுத்தவும் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி கயல்விழி அழகிரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி மேலாளா் ஹா்ஷின் சிங்கை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
இதனிடையே வங்கிக் கிளை மேலாளரை தாக்கியதாக கயல்விழி அழகிரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாஸ்திரி நகா் போலீஸாா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.