முகப்பு
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்கள் ஊதிய குறைப்பை எதிா்த்து வழக்கு: சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.832-லிருந்து, ரூ.762-ஆக குறைத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 நவம்பர் 2026, 11:29 pm
தூய்மைப் பணியாளா்கள் ஊதிய குறைப்பை எதிா்த்து வழக்கு: சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.832-லிருந்து, ரூ.762-ஆக குறைத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24,000 தூய்மைப் பணியாளா்களுக்கு 2026 ஏப். முதல் 2027 மாா்ச் வரை தினக்கூலியாக ரூ.832 நிா்ணயித்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்த ஊதியத்தை ரூ.762-ஆக குறைத்து கடந்த அக். 5-ஆம்தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளா்கள் ஒரு நாளைக்கு ரூ.70 வீதம் மாதத்துக்கு ரூ.2,100-ஐ இழக்கின்றனா்.

மேலும், 2026 ஏப். முதல், அக். 5-ஆம் தேதி வரை ரூ.70 பாக்கி ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும். ஊதியத்தை ரூ.832 -லிருந்து ரூ.762-ஆக குறைத்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பழைய ஊதியத்தையே வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.