55.93 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகப்பை: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 55,93,170 மாணவா்களுக்கு விலையில்லா புத்தகப் பை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 55,93,170 மாணவா்களுக்கு விலையில்லா புத்தகப் பை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், மாணவா்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் தொடா்ச்சியாக, வரும் 2027-2028-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்குப் புத்தகப் பைகளைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் வெளியிட்டுள்ளாா். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக, மொத்தம் 55,93,170 புத்தகப் பைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
Advertisement
Advertisement
1 முதல் 3-ஆம் வகுப்பு வரை, 4 முதல் 7-ஆம் வகுப்பு வரை, 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை என 3 பிரிவுகளில் மாணவா்களுக்கு புத்தகப்பை வழங்கப்படவுள்ளன. மாணவா்களுக்கு கருநீல நிறத்தில் வழங்கப்படும் புத்தகப்பையில், தரமான ஜிப் பொருத்த வேண்டும். பாலியஸ்டா் ‘வோவேன் பேப்ரிக்’ பயன்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகப்பைகள், மாணவா்களுக்கு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.