தில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!
45-வது வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல் தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது குறித்து...
தில்லியில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல் தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது இன்று (நவ. 26) வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நவம்பர் 13-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 15 நாள்கள் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றான இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இக்கண்காட்சியில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கில், அரசின் மகத்தான திட்டங்கள், அரசின் சாதனைகளை குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை போன்ற துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் சார்பில் முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது இன்று (26.11.2026) வழங்கப்பட்டது.
இவ்விருதினை இந்திய பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாவேத் அஷ்ரப், மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் கர்வால் ஆகியோரிடமிருந்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ் பெற்றுக்கொண்டார்.