முகப்பு

340 ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவு

ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை தரம் உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பது பற்றி....

27 நவம்பர் 2026, 9:36 pm
340 ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவு
முதல்வர் விஜய்.
பகிர்:

ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026–27ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், கிராமப்புற போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்தார். பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், சந்தைகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளை கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில், ஆண்டுதோறும் ரூ.2,550 கோடி மதிப்பீட்டில் 2,000 கி.மீ. நீளமுள்ள கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

போக்குவரத்து அளவின் அடிப்படையில், ஆண்டுதோறும் 1,000 கி.மீ. நீளமுள்ள ஒற்றை வழித்தட இதர மாவட்டச் சாலைகள் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் இடைநிலை வழித்தடமாக அகலப்படுத்தப்படும். மேலும், 1,000 கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு

Advertisement

Advertisement

உயர்த்தப்படும். இத்திட்டத்தின் ஊராட்சிச் சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின்கீழ், ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 797.13 கி.மீ. நீளமுள்ள 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு உயர்த்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 226.83 கி.மீ. நீளமுள்ள 103 சாலைகள் ரூ.316.41 கோடியிலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 326.21 கி.மீ. நீளமுள்ள 131 சாலைகள் ரூ.410.77 கோடியிலும், மதுரை மண்டலத்தில் 66.66 கி.மீ. நீளமுள்ள 29 சாலைகள் ரூ.88.28 கோடியிலும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 177.43 கி.மீ. நீளமுள்ள 77 சாலைகள் ரூ.222.24 கோடியிலும் தரம் உயர்த்தப்படவுள்ளன.

சாலைகளின் நிலை, உள்ளூர்த் தேவைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இச்சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

CM Vijay has ordered the upgradation of 340 Panchayat and Panchayat Union roads to the standard of Other District Roads at an estimated cost of ₹1,037.70 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.