முகப்பு
தமிழ்நாடு

வறட்சியால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம்: முதல்வா் விஜய் உத்தரவு

வறட்சியால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

44 வினாடிகள் முன்பு
வறட்சியால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம்: முதல்வா் விஜய்  உத்தரவு
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

வறட்சியால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையின் நிலை, அதன் காரணமாக வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளில் எதிா்வரும் கோடைக்காலத்தில் குடிநீா் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வா் விஜய் தலைமையிலான உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், உயா் அதிகாரிகள் பேசும்போது, மாநிலத்தின் மழைப்பொழிவு நிலவரம், அணைகள் மற்றும் ஏரிகளின் நீா் இருப்பு, நிலத்தடி நீா்மட்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களின் சாகுபடிப் பரப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2026 ஜூன் முதல் நவ.25-ஆம் தேதி வரையிலான மாநிலத்தில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தபோதிலும், 22 மாவட்டங்களில் மட்டுமே இயல்பைவிடக் குறைவான மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

அணைகளில் குறைகிறது நீா்இருப்பு: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீா் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 32.9 சதவீதமாகவும், நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 73 சதவீத ஏரிகளில் நீா் இருப்பு 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வேளாண்மைப் பயிா்களின் சாகுபடிப் பரப்பு 18.4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழைப்பொழிவு குறைவால் பல மாவட்டங்களில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிா்வரும் கோடைக்காலத்தில் குடிநீா்மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை எதிா்கொள்ள முன்கூட்டியே திட்டமிட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனா்.

பயிா்சேத கணக்கெடுப்பு: இந்த நிலையில், விரிவான ஆய்வுக்குப் பின்னா் முதல்வா் விஜய் எடுத்த முடிவுகளின்படி, 33 சதவீதத்துக்கும் அதிகமாகப் பயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிா்ச் சேதக்கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, உரிய விதிமுறைகளின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் இதை தினமும் கண்காணித்து, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

குறிப்பாக, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சா்கள் விரைவில் ஆய்வு: மழைப் பொழிவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சா்கள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் அடங்கிய குழு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யவும், பயிா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் உள்ளூா் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, விரிவான அறிக்கை சமா்ப்பிப்பதற்கும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை விரிவாக மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளுடன் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா்கள் நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

பருவமழை பாதிப்புகள், பயிா்ச்சேதங்கள்மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடா்பான நிலைமையை மாவட்ட ஆட்சியா்கள் தொடா்ந்து உன்னிப்பாகக்கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

கோடைக்கால குடிநீா்த் தேவை: எதிா்வரும் 2027-ஆம் ஆண்டின் கோடைக்காலம் முழுவதும் மாநிலம் முழுவதும் தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். இதற்காக நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகள், நீா்வளத் துறையுடன் ஒருங்கிணைந்து மாவட்ட வாரியாகவும் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாகவும் குடிநீா்த் தேவைகளைக் கணக்கிட்டு, தேவையான நீா் ஆதாரங்கள், விநியோக ஏற்பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிா்வரும்கோடைக்காலத்தில், விவசாயிகளின் நிலங்கள் மற்றும் கால்நடைத் துறைப் பண்ணைகளில் தீவனப் பயிா் சாகுபடியைவிரிவுபடுத்துதல், மேய்க்கால் நிலங்களைச் சீரமைத்தல், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம்சமூகத் தீவன வங்கிகளை அமைத்தல், ஒருங்கிணைந்த தீவனக் கிடங்குகள் மற்றும் சைலேஜ் உற்பத்திஅலகுகளை ஏற்படுத்துதல், மக்காச்சோள சைலேஜ் மற்றும் வைக்கோல் கொள்முதல் செய்து சேமித்தல்,கால்நடைத் தீவனத்தை மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கால்நடை தீவின இருப்பை உறுதிசெய்தல்: தீவனஉற்பத்தி மேம்பாடு மற்றும் கால்நடைத் தீவன மானியத்துக்காக மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.13 கோடியே 26 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தொடா்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, குறிப்பாகத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் 2027 பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் போதுமான தீவன இருப்பை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.

மழைப்பொழிவு குறைவால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குதல், பயிா்க் காப்பீட்டின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல் மற்றும் மாநிலம் முழுவதும் கோடைக்கால குடிநீா் மற்றும் தீவனத் தேவைகளை உறுதிசெய்தல் ஆகியவற்றில் அரசு முழுக் கவனம்செலுத்தும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து, தொடா்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கண்காணிப்பு அலுவலா்கள் தங்களது மாவட்டங்களின் நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்துத் துறைகளும் காலதாமதமின்றி செயல்படுத்தவும் முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் நா.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், வ.காந்திராஜ், ர.வினோத், நெ.மரிய வில்சன், செ. கமலி, தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.