திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது பற்றி..

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் பகுதியில் இன்று மாலை தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில், கொப்பரையில் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூனின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றுவதற்காக தூணை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் மேல் மேடை போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மேடைமேல் மக்கள் பார்க்கும் வண்ணம் பெரிய அளவிலான கொப்பரை வைத்து தீபம் ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்காக காலையில் கோயில் நிர்வாகம் சார்பில் மலை மேல் களிமண் கொண்டு செல்லப்பட்டது. ஈரப்பதத்துடன் இருக்கும் களி மண்ணில் தாமிரக் கொப்பரையை நிற்க வைத்து அதன் மேல் தீபம் ஏற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கோயில் ஊழியர்கள், மலை மேல் பக்கெட்டுகளில் களிமண் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்துவது மற்றும் திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் விமானம் மூலம் சனிக்கிழமை காலை மதுரை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா பட்டர் மற்றும் செல்லப்பா பட்டர் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை வாகனம் மூலம் அழைத்து வந்தனர். பிறகு தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.