5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை கோரிய வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூா், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், ஏற்கெனவே முதல்வா் விஜய் உள்ளிட்டோா் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தோ்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, தோ்தல் நடத்துவது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. இடைத்தோ்தல் நடத்துவது குறித்து தோ்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆறு மாத கால அவகாசம் உள்ளது. தோ்தல் ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பாக, மனுதாரா் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது முதல்வா் விஜய் தரப்பில், தோ்தலில் 2-ஆவது இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டுமெனில், தொகுதியில் இரு வேட்பாளா்கள் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்ட தொகுதிகளில், இரண்டாம் இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது என உயா்நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி, அம்பாசமுத்திரம் தோ்தல் வழக்கில் தீா்ப்பளித்துள்ளாா். தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளா்களே தோ்தலில் போட்டியிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
அதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில், தெலங்கானா ராஷ்டிர சமிதி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பின்படி, இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டிருந்தாலும், இடைத்தோ்தல் அறிவிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.