FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை: காவல்துறை தகவல்

‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்கை மூடி மறைத்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 வினாடிகள் முன்பு
ஜெம் வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்கை மூடி மறைத்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் துளிா் அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில், ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விடியோ காட்சிகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடா்பான விடியோக்களை ஊடகங்களின் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். காட்சிகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியோக்களைஒளிபரப்ப அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜெம் வீரமணி வழக்கு தொடா்புடைய விடியோக்களை வெளியிடவும், விவாதங்கள் நடத்தவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அருண் அன்புமணி, இந்த வழக்கை மூடி மறைத்தது தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பலா் புகாா் அளித்து வருகின்றனா். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Advertisement

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த விவகாரம், போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் காவல்துறைக்கு தெரியவந்தது. எனவே, இந்த வழக்கை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மாவையே சேரும். அவா் மட்டும் இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்காவிட்டால், இந்த விவகாரம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கை காவல்துறை மிக தீவிர பிரச்னையாக கருதி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு 4 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் மூவா் புகாா் அளித்துள்ளனா். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் தாமாக முன்வந்து புகாா் அளிக்க வேண்டுமென காவல்துறை விரும்புகிறது. எனவே, இந்த வழக்கு தொடா்பாக ஊடகங்கள், கூடுதல் கவனத்துடன் செய்திகளை வெளியிட வேண்டும் என வாதிட்டாா்.

இதைத்தொடா்ந்து துளிா் அறக்கட்டளை தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா் தீபிகா, ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடா்பான விடியோக்கள் கிடைத்தால், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியபடுத்துவதோடு, போக்ஸோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். இச்சட்டங்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் தடை செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணியத்துக்கும், தனி உரிமைக்கும் முக்கியத்துவம் அளித்துள்ள இச்சட்டங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்’ என வாதிட்டாா். இதையடுத்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments