திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு: கோபுரத்திலிருந்த பரிவார மூர்த்தி சிலைகள் விழுந்து 4 பக்தர்கள் படுகாயம்
பழமையான பரிவார மூர்த்தி சிலைகளின் பகுதிகள் திடீரென இடிந்து பக்தர்கள் மீது விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து...
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கோபுரத்தில் இருந்த பழமையான பரிவார மூர்த்தி சிலைகளின் பகுதிகள் திடீரென இடிந்து பக்தர்கள் மீது விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் காலாண்டு விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இதனால் மலைக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, பொதுதரிசனப் பாதையில் பக்தர்கள் மண்டபத்தை கடந்து வசந்த மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பழமையான சுண்ணாம்பு கட்டுமான கோபுரப் பகுதியில் இருந்த பரிவார மூர்த்தி சிலைகளின் பகுதிகள் திடீரென இடிந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பகுதியில் அதிகளவில் பக்தர்கள் இருந்ததால், சிலைகள் மற்றும் கட்டடப் பகுதிகள் பக்தர்கள் மீது விழுந்தன. இதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (60), ஜெயா (65), ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சரிதா (40) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (23) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் முதலுதவி பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த முருக பக்தர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, கூட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் உதவவில்லை
கோயில் நிர்வாகம் உதவவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டினர்.
சம்பவம் குறித்து காயமடைந்தவர்களுக்கு உதவிய பக்தர்கள் கூறுகையில், சிலைகள் விழுந்தவுடன் காயமடைந்தவர்களை மீட்க கோயில் ஊழியர்கள் உடனடியாக உதவவில்லை என்றும், பக்தர்கள் செல்லும் பாதையில் இருந்த இரும்பு தடுப்புகளைத் திறந்து காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வருவதற்கும் போதிய உதவி செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற உடனேயே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், தாங்களே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக வயதான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் காயமடைந்ததால், கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், பக்தர்களின் பாதுகாப்பில் கோயில் நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பழமையான கோபுரங்கள், சிலைகளை ஆய்வு செய்ய கோரிக்கை
திருத்தணி கோயிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளுக்கு அருகே அமைந்துள்ள பழமையான கோபுரங்கள் மற்றும் சிலைகள் குறித்து உடனடியாக முழுமையான பாதுகாப்பு ஆய்வு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோயில் வளாகத்தில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகள் கோபுரங்கள் மற்றும் சிலைகள் மீது ஏறி நிற்பதால் அவற்றுக்கும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். எனவே, குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் செல்லும் பாதைகளில் உள்ள பழமையான கோபுரங்கள், சிலைகள் மற்றும் கட்டடங்களின் உறுதித்தன்மையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Four devotees injured in tiruttani temple Statues collapse
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.