துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியானது துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (அக். 9) வெளியாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக வெற்றி பெற்றுள்ளது.
இத்துடன், 2 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான திமுக 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது. பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி.
அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதல்வர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
M.K. Stalin has described the outcome of the Maduranthakam and Tarapuram by-elections as a "temporary victory" resulting from the betrayal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.