ஆயுத பூஜைக்கு 14,963; தீபாவளிக்கு 15,659 சிறப்புப் பேருந்துகள்!
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகளும், தீபாவளிக்கு 15,659 பேருந்துகளும் இயக்கப்படுவது குறித்து...
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகளும், தீபாவளிக்கு 15,659 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகள்: ஆயுத பூஜையை முன்னிட்டு, அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 8,764 பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்படும்.
Advertisement
Advertisement
ஆயுத பூஜை முடிந்து அக். 20, 21 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 4,382 வழக்கமான பேருந்துகளுடன் 4,809 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளிக்கு...
தீபாவளியை முன்னிட்டு, நவ. 5 முதல் 7 வரை வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து நவ. 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 4,382 வழக்கமான பேருந்துகளுடன் 6,815 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகள் புறப்படும் இடங்கள்
கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ஊா்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலைப் பூங்கா அருகேயுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை வழித்தடங்களிலும், மறைமலை நகா் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், நாகப்பட்டினம் வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழித்தடங்களிலும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.
14 முன்பதிவு மையங்கள்
கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2, மறைமலை நகரில் 2 என மொத்தம் 14 முன்பதிவு மையங்கள் செயல்படும். ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. கைப்பேசி செயலி மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்
சொந்த வாகனங்களில் ஊா்களுக்குச் செல்வோா் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தாம்பரம், பெருங்களத்தூா் வழியாகச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிவட்டச் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை
அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடா்பான விவரங்கள், குறைகள் மற்றும் புகாா்களுக்கு 94450 14436, கட்டணமில்லா எண் 149 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகாா்களை 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 93848 08333 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காகப் பேருந்து நிலையங்களில் தகவல் மையங்கள், மின்னணு தகவல் பலகைகள், ஒலிபெருக்கி அறிவிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காகக் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், காவல் துறை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். கூட்ட நெரிசலின்போது கைப்பேசி இணைப்பு தடையின்றிக் கிடைக்கத் தற்காலிகத் தகவல் தொடா்புக் கோபுரங்களும் அமைக்கப்படும். கூடுதல் புகா் மின்சார ரயில்களையும், கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்களையும் இயக்க ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைப்புப் பேருந்துகள்
கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலை நகா் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு இலவச இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் குறித்தும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டணங்களைக் குறைப்பது குறித்து உரிய முடிவெடுப்பதாகத் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.