ரூ. 35-க்கு ஒரு யூனிட் மின்சாரம்: மக்கள் வரிப்பணத்தில் வீண் செலவு ஏன்? - டிஆர்பி ராஜா கேள்வி
திமுக ஆட்சியில் யூனிட் ரூ. 5.40-க்கு ஒப்புதல் பெற்ற மின் கட்டணங்கள் என்னவாயிற்று என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி...
திமுக ஆட்சியில் யூனிட் ரூ. 5.40-க்கு ஒப்புதல் பெற்ற மின் கட்டணங்கள் என்னவாயிற்று என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.
அதன்படி 4500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை கோரி இருந்த மின்சார வாரியம், ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்திருந்த தனியார் மின் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் ரூ.31.99 முதல் ரூ.37 வரையிலான விலையில், சராசரியாக, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.
Advertisement
Advertisement
கடந்த திமுக ஆட்சியைவிட 5 முதல் 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரூ. 5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ. 35 செலவழித்து வாங்கும் தவெக அரசின் நிர்வாகம்! தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற தவெக அரசு 2026 மே 23-ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே தவெக அரசு 2026 ஜூன் 25-ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், 2026 அக். 12-ல், ஒரு யூனிட் ரூ. 37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! திமுக ஆட்சியில் வெறும் ரூ. 5.40 முதல் ரூ. 9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
செப். 9-ஆம் தேதியே ஆந்திரா ரூ. 16 முதல் ரூ. 20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறமையான திராவிட மாடல் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன!
இவ்விரு நிலையங்களில் வெறும் ரூ. 5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு? மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால்தான் இந்த நிலை!
தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாள்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ரூ. 3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்! மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்? மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா?” என பதிவிட்டுள்ளார்.
Former Minister T.R.B. Raja has questioned what happened to the electricity tariffs approved at ₹5.40 per unit during the DMK regime.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.