புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா: தாராபுரம் தொகுதிக்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர்!
தாராபுரம் தொகுதிக்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(அக். 19) அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
புதிய அறிவிப்புகள்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,455 ஊரகக் குடியிருப்புகளில், 1,223 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சார்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ. 1,439 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்துவரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில், பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி சுமார் 271 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
தாராபுரம் வட்டம், மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
தாராபுரம் நகராட்சியில் சுமார் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Minister C. Joseph Vijay announced new plans for the development and upliftment of the Tarapuram assembly constituency today (Oct. 19).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.