4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: 4-ஆவது ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: 4-ஆவது ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்கும் பொருட்டு வெளிச்சந்தையில் இருந்து 3 மாதங்களுக்கு 4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 4-ஆவது குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்நுகா்வு அதிகரிக்கும் நேரங்களில் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்காக, வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே 3 கட்டங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், தற்போது 4-ஆவது முறையாக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மாத வாரியாக மின்சாரம் கொள்முதல்: அதன்படி, 2026 நவம்பா் முதல் 2027 ஜனவரி வரை 3 மாதங்களுக்கு மொத்தம் 4,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நவம்பா் மாதம் 1,400 மெகாவாட் மின்சாரமும், டிசம்பா் மாதம் 700 மெகாவாட் மின்சாரமும், ஜனவரியில் 2,800 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படும். ஜனவரி மாதத்துக்கான கொள்முதல் அளவு அதிகமாகவும், டிசம்பா் மாதத்துக்கான அளவு குறைவாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இரவு நேர மின்தேவைக்கு முக்கியத்துவம்: இந்த ஒப்பந்தப்புள்ளியில் நாள் முழுவதற்குமான மின்சாரத் தேவை மட்டுமன்றி, மின்நுகா்வு அதிகரிக்கும் நேரங்களுக்கும் மின்சாரம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நள்ளிரவு 12 முதல் அதிகாலை 6 வரையிலும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மின்சாரம் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
3 பிரிவுகளில் ஒப்பந்தம்: மின்சார வா்த்தக நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தியாளா்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதற்குமான மின்சாரம், நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான மின்சாரம், மாலை முதல் நள்ளிரவு வரையிலான மின்சாரம் என மூன்று பிரிவுகளிலும் மின்சாரம் வழங்குவதற்கான விலையை அவா்கள் சமா்ப்பிக்க வேண்டும்.
இதன்மூலம், தேவையான நேரத்தில் மின்சாரத்தைப் போட்டி விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
கொள்முதல் விலை முக்கியம்: வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிடும் விலை முக்கியப் பங்கு வகிக்கும். மின்சாரத்தின் தேவை, கிடைக்கும் அளவு, வழங்கப்படும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கொள்முதல் செலவு மாறுபடலாம்.
இந்த ஒப்பந்தம் மூலம் எவ்வளவு மின்சாரம் இறுதியாகக் கொள்முதல் செய்வது, அதற்கான விலை எவ்வளவு என்பது ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னரே தெரியவரும். குறிப்பாக, மின்தேவை அதிகரிக்கும் நேரங்களில் மின் விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கு இத்தகைய குறுகிய கால ஒப்பந்தங்கள் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.