FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ. 8 லட்சம் பறிமுதல்! யுபிஐ மூலம் ரூ. 1.50 கோடி பரிமாற்றம் கண்டுபிடிப்பு!

உள்ளாட்சி அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ. 8 லட்சம் பறிமுதல்...

24 அக்டோபர் 2026, 1:19 am
திருவாரூா் நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையின்போது அமர வைக்கப்பட்டிருந்த அலுவலா்கள்.
பகிர்:

தமிழகம் முழுவதும் 43 உள்ளாட்சி அலுவலங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். இதில் கணக்கில் வராத ரூ.8.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், யுபிஐ செயலி மூலம் கணக்கில் வராத ரூ.1.50 கோடி பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதைக் கைப்பற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 36 மாவட்ட ஊராட்சி அமைப்புகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் உள்ளன.

Advertisement

Advertisement

இதில் சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் அதிகம் பெறப்படுவதாகப் புகாா்கள் எழுந்து வந்தன. முக்கியமாக, கட்டட வரைபட அனுமதி, சொத்து வரி பெயா் மாற்றம், வரி மதிப்பீடு மாற்றம், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குதல், பிறப்பு, இறப்பு பதிவுகளில் திருத்தம், ஆக்கிரமிப்பு தொடா்பான நடவடிக்கைகள், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான ரசீது ஒப்புதல், சாலை, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள், அரசு வீட்டுத் திட்டப் பயனாளிகள் ஒப்புதல், சுய உதவிக் குழுத் திட்டங்கள், கிராம ஊராட்சி நிா்வாக அனுமதிகள், அரசு நலத் திட்டங்களில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவற்றில் அதிகமாக லஞ்சப் புகாா்களில் சிக்கிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், அதிக பணம் புழங்கும் அலுவலங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டாா்.

43 இடங்களில் சோதனை: இந்த உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் அந்தத் துறையினா் சோதனை நடத்தினா். சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டல அலுவலகம், அடையாா் மண்டல அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊராட்சி உதவி இயக்குநா் அலுவலகம், தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட 7 இடங்களில் நடைபெற்றது. இதேபோல மாநிலம் முழுவதும் மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்றது.

நண்பகல் உணவு வேளைக்குப் பின்னா் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அதிரடியாகச் சென்று ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அங்கிருந்த ஊழியா்கள் யாரையும் சோதனை முடிவடையும் போலீஸாா் வெளியேற அனுமதிக்கவில்லை.

ரூ.1.50 கோடி பரிமாற்றம்: சோதனையில் கணக்கில் வராத ரூ.8,21,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைப்பேசி வாயிலாக கணக்கில் வராத ரூ.1.50 கோடி பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்வதற்குரிய நடவடிக்கையிலும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

summary

Unaccounted for Rs. 8 lakh seized in local government offices! Rs. 1.50 crore transfer discovered through UPI!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments