பால் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? ஆவின் விளக்கம்!
ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு ஆவின் நிர்வாகம் விளக்கம்.
தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட 67 ஆவின் பால் பொருள்களின் விலை உயர்வுக்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆவின் நிறுவனம், தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் உபபொருள்களை நியாயமான விலையில் வழங்குவதிலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதும் ஆவினின் முக்கிய நோக்கமாகும்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்கு உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக பால் உற்பத்தி விளங்குகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
தற்போதைய சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருள்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு. ஆவின் பால் உபபொருள்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருள்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருள்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ்வித லாப நோக்கம் இன்றி, உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருள்களின் போட்டித்தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும், பால் உப பொருள்களின் குறைந்த அளவு விலை திருத்தம் அவசியமானதாகும்.
மேலும், இந்த விலை திருத்தம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை, பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதுடன். கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பினையும் வலுப்படுத்த முடியும்.
ஆவின் மேற்கொண்டுள்ள இந்த விலைத் திருத்தம், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோருக்கு தரமான பால் உபபொருள்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்களைத் தொடர்ந்து வாங்கி, கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கும் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி நெருங்கும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு நாளை (அக். 28) அமலுக்கு வரவுள்ளது.
The Aavin management has provided an explanation regarding the price hikes for 67 Aavin dairy products, including curd, butter, and ghee.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.