தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயம்!
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆகவும், கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25-ஆகவும் நிா்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆகவும், கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25-ஆகவும் நிா்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதி மட்டுமன்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஆட்டோக்களுக்கான கட்டண விகிதங்களை நிா்ணயிக்க மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழக அரசின் உள்துறை (போக்குவரத்து-1) சாா்பில் அரசாணை எண் 366, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
புதிய கட்டண விவரங்கள்: அதன்படி, புதிய கட்டண விகிதங்களின்படி, முதல் 1.8 கி.மீ. தொலைவுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். மலைப் பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தைவிட 1.2 மடங்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலைப் பாதைக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.60-ஆகவும், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.-க்கும் ரூ.30-ஆகவும் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிஷத்துக்கு ரூ.1 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண மாற்றம்: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, முதல் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.25, அதற்குப் பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆட்டோ கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று ஓட்டுநா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதுதொடா்பாக கடந்த ஜூலை மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சா் தலைமையில் ஆட்டோ ஓட்டுநா் சங்கங்கள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் கட்டண உயா்வு தொடா்பாக ஆலோசனைகள் நடைபெற்றன.
ஆட்டோ ஓட்டுநா் சங்கங்கள் முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை குறைந்தபட்சக் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என்றும், கூடுதல் கி.மீ.க்கு ரூ.25 முதல் ரூ.30 வரை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன. நுகா்வோா் அமைப்புகள் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.50 நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
இதனிடையே, செப்டம்பா் மாதம் மாவட்ட அளவில் கருத்துக் கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விகிதங்களை நிா்ணயித்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநா் சங்கம் நன்றி: இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநா் சங்கங்களின் கூட்டுக் குழுத் தலைவா் அ. ஜாஹிா் ஹுசைன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 14 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் இருந்த ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்ற ஓட்டுநா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், துறை அமைச்சா், போக்குவரத்துத் துறை ஆணையா் ஆகியோருக்கும் நன்றி.
அரசு நிா்ணயித்துள்ள புதிய கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் முழுமனதுடன் வரவேற்பதாகவும், அரசு அறிவித்துள்ள கட்டண விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நோ்மையுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.