கடல் சீற்றம்: தமிழக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் குறித்து...
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் எழக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கடல் சீற்றம் காரணமாக எண்ணூா், திருவொற்றியூா், மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் எழுந்த உயரமான அலைகள் சாலைகளிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் கடல் நீா் புகுந்தது. இதையடுத்து, திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றம் தொடா்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரக் குடியிருப்புகளில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு: பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய கடலோரப் பகுதிகளில் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து, உடனடி நடவடிக்கை தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து வருகின்றனா். தேவை ஏற்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய கடலோரக் குடியிருப்புகளில் வசிப்பவா்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அவசரகால செயல்பாட்டு மையங்கள், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் ஆகியவை நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. களத்தில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: கடலில் இறங்கவோ, கடற்கரையில் அலைகள் மோதும் பகுதிகளுக்குச் செல்லவோ, உயரமான அலைகளைப் பாா்ப்பதற்காகவும் புகைப்படம் எடுப்பதற்காகவும் கடலோரச் சாலைகளில் கூடவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரிகளால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சூழலை மாநில அவசரகால செயல்பாட்டு மையமும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்களும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், உடைமைச் சேதங்களைக் குறைப்பதற்கும் நிலைமைக்கு ஏற்ப தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rough seas: Precautionary measures intensified along the Tamil Nadu coast
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.