அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை: நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவ. 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவ. 2 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, நவ. 6 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நேரடியாக லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றார்கள் என்பதற்காக தன்னை எப்படி பொறுப்பாக்க முடியும். கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரியிருந்தார்.
அதேபோல், அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாருக்கும், அன்பில் மகேஸுக்கு இடையேயான தொடர்பு குறித்தும், பணப்பரிமாற்றங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல, ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அன்பில் மகேஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே, தனது இல்லத்தில் நடந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ஒப்படைக்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையையும் நவ. 2-க்கு தள்ளிவைத்துள்ளார்.
The Madras High Court has adjourned the hearing on the bail plea of former DMK minister Anbil Mahesh to November 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.