FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததைப் பற்றி...

22 செப்டம்பர் 2026, 8:41 am IST
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய். - TN DIPR
பகிர்:

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்முறையாக 2022-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப். 15 ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது.

பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தையொட்டி, சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.

காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். முதல் நாள் காலை உணவுத்திட்டத்தில் சாம்பார், வெண்பொங்கல், சர்க்கைப் பொங்கல் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டன.

இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சார்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

summary

Chief Minister S. Joseph Vijay inaugurated the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme' on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments